மாநிலங்களவையில் 12 எம்பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேற்று ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா கொண்டு வரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எந்த விவாதமும் நடத்தாமல் இந்த மசோதாவை அரசு நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. அதே சமயம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால கூட்டத் தொடரின் போது, அவை ஒழுங்கு நடவடிக்கையை மீறி நடந்து கொண்டதற்காக காங்கிரசை சேர்ந்த 6 எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்பிக்கள் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் 2ம் நாள் நேற்று நடந்தது. மாநிலங்களவை காலையில் கூடியதும், அவையின் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.  இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘அவையின் விதிமுறை மீறியதால்தான் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது அவை எடுத்த முடிவு. அவைத்தலைவரின் முடிவு அல்ல. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் தங்கள் செயலுக்காக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை, மாறாக அதை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். எனவே எதிர்க்கட்சி தலைவர் முறையிடுவதற்கு இந்த விஷயம் தகுதியில்லை என்றே கருதுகிறேன்’’ என்றார்.

இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்த அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதே போல மக்களவையிலும், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை கண்டித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதன் காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘ஒன்றிய அரசு எதேச்சதிகாரத்துடன் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் குரலை ஒடுக்க அவர்களை மிரட்டும் வகையில் சஸ்பெண்ட் செய்கின்றனர். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறோம். மாநிலங்களவையில் எங்கள் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதை பார்த்து அமைதியாக இருக்க முடியாது’’ என்றார்.

இதே விவகாரம் தொடர்பாக இன்று காலையில் காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

* ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ‘கேட்காமல் விட முடியாது’

மாநிலங்களவையில் நேற்று பிற்பகல் ஆளுங்கட்சி அவைத்தலைவர் பியூஸ் கோயல், கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்கால கூட்டத்தொடரின் இறுதியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை விதிமுறையை நடந்து கொண்ட சம்பவம் குறித்து விவரித்தார். அப்போது அவர், ‘‘அவையின் கண்ணியத்தை சீர்குலைத்த 12 எம்பிக்களும் அவைத்தலைவரிடமும், இந்த அவையிலும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ‘‘நாடாளுமன்றத்தில் மக்களுக்கு குரல் கொடுத்ததற்காக எம்பிக்கள் யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார். இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், ‘‘அவையின் பெண் பாதுகாவலர்களை தாக்கியது போன்ற சம்பவங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆதரிக்கிறாரா? சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை மன்னிக்க முடியாது’’ என்றார்.

* விவாதமற்ற நாடாளுமன்ற ஜனநாயகம் நீடூழி வாழ்க

விவாதமின்றி வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என அரசின் விருப்பமும், எதிர்க்கட்சிகள் விரும்பமும் ஒரே மாதிரி இருப்பதால் விவாதம் நடத்த தேவையில்லை என வேளாண் அமைச்சர் விளக்கம் அளித்தார். வேளாண் சட்டம் இயற்றும் போது, ஆளும் தரப்பும், எதிர்தரப்பும் உடன்படவில்லை, அப்போதும் விவாதம் நடத்தப்படவில்லை. சட்டத்தை ரத்து செய்யும் போது இரு தரப்பும் உடன்பட்டதால் விவாதம் நடத்தப்படவில்லை. எது எப்படியோ, விவாதம் என்பது இல்லை. விவாதமில்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் நீடூழி வாழ்க!’’ என ஒன்றிய அரசை கிண்டலடித்துள்ளார்.

* கூட்டத்தொடரை புறக்கணிப்போம்

மாநிலங்களவையில் இருந்து 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நேற்று காலை அவை கூடும் முன்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஆர்ஜேடி,விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ராகுல் காந்தியும் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அனைத்து தலைவர்களும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து, சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் இன்று ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளனர். சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறாவிட்டால், ஒட்டுமொத்த கூட்டத்தொடரையும் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கவும் ஆலோசித்து வருகின்றன.

Related Stories:

More