மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து 12 மினி பேருந்துகள் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை:  சென்னையில் போக்குவரத்து நெரிசலை  குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும்,  அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கலைஞர்  தலைமையிலான அரசால் கடந்த 2007ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமான பணிகளை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்  2009ம் ஆண்டு தொடங்கி வைத்தார். தற்போது இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு  வருகிறது. இவ்வாறு சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுகிற  வகையில், பொது போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை  தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்து கழகத்தின் 12 இணைப்பு மினி பேருந்துகளின் இயக்கத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதுபோல, ஆலந்தூரில் நடந்த நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து மினி பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மாநகர போக்குவரத்துக்கழக பொது மேலாளர்கள் சிங்காரவேலு, செல்வமணி, மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குனர் சதீஷ் பிரபு, ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் ஆ.துரைவேலு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.பூபாலன் கீதா ஆனந்தன், கிரிஜாபெருமாள், முன்னாள் கவுன்சிலர்கள் கே.பி.முரளி கிருஷ்ணன், எம்.ஆர்.சீனிவாசன், ஜெ.நடராஜன் இயேசுதாஸ், ஜெகதீஸ்வரன், இரா.பாஸ்கரன், நிர்வாகிகள் தமிழ்செல்வி, அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன  அதிகாரிகள் கூறுகையில், ‘‘12 மினி பேருந்துகள் வாயிலாக தினசரி 148 நடைகள்  இயக்கப்படும். மற்ற அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்தும் மாநகர்  போக்குவரத்து கழக இணைப்புச் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Related Stories: