தமிழகமே பாராட்டும் முதல்வரை விமர்சனம் செய்ய அதிமுகவினருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழகமே பாராட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை, விமர்சனம் செய்ய அதிமுகவினருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சிக் காலங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து கண்காணித்திருந்தால் இந்த அளவிற்கு பாதிப்பு வந்திருக்காது. சென்னையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது அதிமுக அரசின் அலட்சியப் போக்கு காரணமாக கடுமையான பாதிப்பை சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அதிமுக ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு மக்கள் பாதிப்பிற்கு காரணமான அதிமுகவினர் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையோ, அரசையோ விமர்சனம் செய்வதற்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார். ஆனால், இன்றைய முதல்வர் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாத பகுதி எதுவுமே இல்லை என்று கூறுகிற அளவிற்கு அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை துடைக்கவும், ஆறுதல் கூறவும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதை பாராட்டுவதற்கு மனம் இல்லையென்றாலும், குற்றம், குறை கூறாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, மக்கள் நலனில் அக்கறையோடு, பொறுப்புணர்ச்சியுடன் முழங்கால் அளவு தண்ணீர் இருக்கின்ற இடங்களிலும் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களோடு, மக்களாக அவர்களது துன்பத்திலும், துயரத்திலும் இரண்டறக் கலந்து செயல்படுகிற முதல்வரை பார்த்து தமிழகமே பாராட்டுகிறது.

Related Stories: