வளி மண்டல சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்: 2 நாளில் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தம்

சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட கிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. அதிக பட்சமாக கடலூர் மாவட்டத்தில் 170 மிமீ மழை பெய்துள்ளது.

இதுதவிர கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்தது. இதுதவிர மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது.

சென்னையில் காலை, மதியம், இரவு என விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சென்னை நகரில் பல இடங்கள் இன்னும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. எப்போது மழை நிற்கும் என்ற அளவுக்கு நகரில் தேவையான அளவை தாண்டியும் பெய்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருவதால், இன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.

பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குமரிக்கடல் பகுதியில் உள்ள வளிமண்டல காற்று சுழற்சி வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என்பதால் படிப்படியாக மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: