திருச்சி : உலகம் முழுவதும் காற்று மாசுபாடு மனிதர்களை அச்சுறுத்தும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 46 லட்சம் பேர் சுவாச பிரச்னை காரணமாக இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2019ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும், காற்று மாசு காரணமாக 1,16,000 பச்சிளம் குழந்தைகள் பிறந்து ஒரு மாதத்தில் இறந்து விட்டன என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கிராமங்களில் இலவசமாக கிடைத்த குடிநீர், இன்று விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விடலாம்...‘‘காற்று மாசு அதிகரித்து கொண்டே சென்றால், சுத்தமான காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை’’ விரைவில் ஏற்படும்.
காற்று மாசு அதிகரித்தால் கண் எரிச்சல், இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.நகரங்களில் மட்டும் காற்று மாசு அதிகரித்த நிலையில், கிராமங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது வேதனைக்குரியது. இதற்கு முக்கிய காரணம், காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு இல்லாதது தான். நகர் மற்றும் கிராமங்களில் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் மரக்கட்டைகள் உள்பட பல்வேறு கழிவுகளை தீயிட்டு எரிப்பதை தவிர்க்க வேண்டும். காற்று மாசுபடுதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்ற அச்சம் இருக்க வேண்டும். அப்போது தான், காற்று மாசுபாட்டை குறைக்க முடியும்.
முக்கியமாக, பெரிய நகரங்களில் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகைதான் காற்று மாசுக்கு முக்கிய காரணம். 72 சதவீதம் காற்று மாசு டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் ஏற்படுகிறது என்று ஒன்றிய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு பைக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், காற்று மாசுபாடும் அதிகரிக்கும். எனவே, பேட்டரி வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த மக்கள் அக்கறை காட்ட வேண்டும். முக்கியமாக, பொதுப்போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தினால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன் மூலம் காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வரலாம்.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ‘காற்றின் தரத்தை’ அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். திடீரென காற்று மாசு அதிகரித்தால், அதற்கான காரணத்தை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். தூயக்காற்றின் தோழனான மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் மரங்களை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். மேலும், காற்று மாசுபாடு குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் தலைநகர் டெல்லி முன்னிலையில் உள்ளது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்விஷயத்தில் வெற்றி பெற முடியாது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். உயிர்வாழ தேவையான காற்றின் மீது ஒவ்வொருவருக்கும் மிகுந்த அக்கறை வேண்டும். காற்று மாசால் தவித்து வரும் டெல்லியை போல், பிற நகரங்களும் சிக்கி விடக்கூடாது. காற்று மாசு அதிகரித்து கொண்டே சென்றால், அடுத்த தலைமுறையினர் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே, நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தலைநகரமே உதாரணம்!காற்று தரக்குறியீடு ஆறு வகைகளாக தரம் பிரிக்கப்படுகிறது. அதன்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 151-200 புள்ளிகள் வரை இருந்தால், ஆரோக்கியமான மக்களின் உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்கும். சில வாரங்களாக, டெல்லியில் 382 முதல் 400 புள்ளிகள் வரை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட தூரம் செல்பவர்களை தவிர்த்து, கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் சைக்கிளை பயன்படுத்தலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.முக்கிய பிரச்னைஇலவசமாக கிடைத்த ‘குடிநீரை’ இன்று விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடிநீரை போல, சுத்தமான காற்றையும் விலைக்கு வாங்க வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியமில்லை. வளர்ச்சி கண்டிப்பாக தேவை, ஆனால், மனித ஆரோக்கியத்தை விட வளர்ச்சி பெரிதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, மரங்கள் அதிகளவில் நட வேண்டும். காற்று மாசு பிரச்னையை முக்கிய பிரச்னையாக எடுத்து, அதற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.