கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

மஞ்சூர் :  கோத்தகிரி, கீழ்குந்தா, பிக்கட்டி, அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் நடந்த முகாம்களில் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள்.நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோத்தகிரி, கீழ்குந்தா, பிக்கட்டி, அதிகரட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 280 நிலையான முகாம்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 300 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.

 மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன் மேற்பார்வையில் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம், கன்னிகாதேவி காலனி, கேஎம்எப் மருத்துவமனை, டானிங்டன் பஸ் நிலையம், காத்துகுளி சமுதாயகூடம், கன்னெரிமுக்கு உயர்நிலைப்பள்ளி, தவிட்டுமேடு சமுதாயகூடம், கேர்பெட்டா துணை சுகாதார நிலையம், கோத்தகிரி பஸ் நிலையம் உள்ளிட்ட 9 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகீம்ஷா பார்வையிட்டார் தொடர்ந்து அவர் பொதுமக்கள் மத்தியில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். பொது இடங்களில் கட்டாய முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் மஞ்சூர் அங்கன்வாடி மையம், முள்ளிமலை அரசு உயர் நிலைப்பள்ளி,  ஓணிகண்டி துணை சுகாதார நிலையம், குந்தாபாலம் சமுதாயகூடம், கெத்தை மின்வாரிய மருத்துவமனை ஆகிய இடங்களில் முகாம் நடந்தது.

முகாமை பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராகீம்ஷா, கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பிக்கட்டி பேரூராட்சி சார்பில் பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிக்கட்டி அங்கன்வாடி மையம், எடக்காடு நடுஹட்டி சமுதாயகூடம் ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிக்கட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயந்த் மோசஸ் முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதிகரட்டி பேரூராட்சி சார்பில் நேற்று அதிகரட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணியாபுரம், கோடேரி, கிளிஞ்சாடா, காட்டேரி துணை சுகாதார நிலையம், கொல்லிமலை ஆகிய 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகீம்ஷா மற்றும் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Related Stories: