ஒரு மாதத்திற்குள் 6 இடங்களில் மண்சரிவு பர்கூர் மலைப்பாதையில் சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பாதையில் அடுத்தடுத்து நிகழ்ந்த மண்சரிவு மற்றும் சாலை பிளவுகளுக்கு, கடந்த ஆண்டு நடந்த சாலை விரிவாக்க பணிகளில் கட்டுமான தொழில்நுட்ப குறைபாடே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடையாததால் பேருந்து சேவை இல்லாமல், 32 மலைக்கிராம மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தியூரிலிருந்து  கர்நாடக மாநிலம் கொள்ளேகால், மைசூர் செல்லும் சாலை, பர்கூர் மலைப்பாதை வழியாக செல்கிறது. பர்கூர் ஊராட்சியில் 32 மலை கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் ராகி,கம்பு, காய்கறிகள் இவ்வழியாகவே விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். வனப்பகுதிஆரம்பிக்கும் வறட்டுப்பள்ளம் அணை முதல் தமிழக எல்லையான கர்கேகண்டி வரை சுமார் 42 கிமீ தொலைவிற்கு மலைப்பாதையை அகலப்படுத்தும் பணி கடந்த 2018ம் ஆண்டு ரூ 80 கோடி மதிப்பீட்டில் துவங்கி கடந்த மார்ச்சில் நிறைவடைந்தது. இதில் மலைப்பாதை அகலப்படுத்தப்பட்டு சிறு பாலங்களும், நீர் வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு,  இந்த சாலை தாக்கு பிடிக்காமல் அடுத்தடுத்து 6 முறை மண்சரிவும், சாலைகளில் பிளவும் ஏற்பட்டு பழுதடைந்தது.

இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையில் சாலை சிதிலமடைவதற்கு கடந்த ஆண்டு மேற்கொண்ட சாலை விரிவாக்க பணிகளில் கட்டுமான  தொழில் நுட்ப குறைபாடே காரணம் என பழங்குடி மக்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த சாலை பணிகளை விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தி உள்ளனர். சரிந்து விழுந்த பாறைகள் அகற்றப்பட்ட போதிலும்,பெயர்ந்து விழுந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடையாததால் பர்கூர் மலைப்பாதையில் இருசக்கர மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

பேருந்துகளும் சரக்கு வாகனங்களும் இல்லாததால் போக்குவரத்து வசதி இன்றி 32 மலைகிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழித்தடத்தில் இருமாநில பேருந்து போக்குவரத்தும் தொடர்ந்து தடைபட்டுள்ளது. கூடுதல் செலவு செய்து இருசக்கர வாகனங்களில் பயணிப்பதாகவும், விளை பொருட்களை அந்தியூர் சந்தைக்கு கொண்டு வருவதிலும் சிரமம் நீடிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து முடங்கியதை போலவே மலைகிராம மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி இருப்பதால் , விரைந்து பர்கூர் மலை பாதைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: