தொடர் மழையின் காரணமாக பிச்சாட்டூர் ஏரி உபரிநீர் திறப்பு

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே தொடர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 5000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இதன் கொள்ளளவு 281 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரி பகுதியில் மீண்டும் பெய்தது வரும் மழையால்,  தற்போது 280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று 280 மில்லியன் கன அடிக்கு மேல், நீர் இருப்பு அதிகமானதால் தண்ணீர் திறக்கப்பட்டது.

பிச்சாட்டூர் ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 5000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக நேற்று வினாடிக்கு காலை 1000 கன அடி வீதம் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 12 மணிக்கு 3000 கன அடி வரை திறக்கப்பட்டது. பின்னர், மாலை 6 மணிக்கு 5 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. பிச்சாட்டூர் தண்ணீர் திறப்பால் சுருட்டபள்ளி தடுப்பணையும், சிட்ரபாக்கம் தடுப்பணையும் நிரம்பி வழிந்து சீறிப்பாய்கிறது. மேலும், பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள ஒதப்பை கிராமத்தின் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூடப்பட்டது. இதனால், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை போக்குவரத்து நேற்றோடு 10வது நாளாக நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் யாரும் பாலத்தை கடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   

Related Stories: