தமிழக வணிகவரித்துறையில் செயல்படும் பறக்கும்படை பணியை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம்: உதவி ஆணையர்கள் தலைமையில் 3 ஷிப்டுகளாக ஊழியர்கள் நியமனம்

சென்னை: வணிக வரித்துறையில் பறக்கும் படைகளின் பணிகளை ஒருங்கிணைக்க மாநில கட்டுப்பாட்டு அறை உருவாக்கம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது வணிகவரித்துறையில் செயல்படும் சுற்றுப் படைகளின் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கு பாஸ்டேக் உடன் இணைந்த மின்னணு வழிப்பட்டி மூலம் சந்தேகப்படக்கூடிய வாகனங்களை கண்டறிந்து சுற்றுப்படைகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக மாநில கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.

இந்த கட்டுப்பாட்டு அறையில் அலுவலர்கள் 24 மணி நேரமும் 7 நாட்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவர். இக்கட்டுப்பாட்டு அறைக்கு உரிய உபகரணங்களோடு கூடிய கட்டமைப்பு வசதிகள் ரூ.3.86 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஆணையர் அறிக்கை அனுப்பியிருந்தார். அதில், உதவி ஆணையர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் வணிகவரித்துறை அதிகாரி மற்றும் துணை வணிக வரி அலுவலர்கள் அடங்கிய 24 மணி நேரமும் 7 நாட்கள் சுழற்சி முறையில் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் வாகனங்களின் நகர்வுகள் கண்காணிக்கப்படுகிறது.

மாநில கட்டுப்பாட்டு அறை மூலம் பாஸ்டேக் மூலம் இ-வே ரசீது இணைக்கப்பட்டு அதன் மூலம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான வகையில் வாகனங்களின் நகர்வுகள் இருந்தால் சுற்றுப்படை மூலம் அடுத்து வரும் சோதனை மையங்கள் மூலம் வாகனங்கள் அதிரடி சோதனை செய்யப்படுகிறது. இதில், உதவி ஆணையர், 2 வணிகவரித்துறை அதிகாரி, 3 துணை வணிகவரி அலுவலர், 5 உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர் 8 மணி நேரம் 3 சுற்று அடிப்படையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்காக, 100 ஜிபிஎஸ் கருவி, 10 டிவி, 100 பிடிஇசட் கேமரா, 10 கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு உரிய கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.3.86 கோடி ஒதுக்க ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: