தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டு அங்கீகார அரசாணையை எதிர்த்த வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும் நிரந்தர அங்கீகாரம் வழங்க கோரியும்  தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துமாறு  தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நிரந்தர அங்கீகாரம் வழங்க வகை செய்யும் 1994ம் ஆண்டு அரசாணையை திரும்ப பெற்று, 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நவம்பர் 12ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை ரத்து செய்ய கோரியும், தடை விதிக்க கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு  அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்ட பிரிவுகளிலும்,  மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கான விதிகளிலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அங்கீகாரம் என்பது நிரந்தரமானது. சட்ட விதிகளின்படி அதை  திரும்ப பெற முடியுமே தவிர, காலக்கெடு நிர்ணயித்து கட்டுப்பாடு விதிக்க  முடியாது.

சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரத்தை அதிகாரிகள் செயல்படுத்த முடியாது. தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது. பல ஆண்டுகளாக  நிரந்தரமாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்குவது  நிர்வாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வி துறை செயலாளர், பள்ளிக் கல்வி துறை இயக்குனர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர், தொடக்க கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories:

More