முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்துடன் இணைந்து இவை செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 51 வகையான நோய்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெறலாம். கடந்த ஆண்டு முதல் கொரோனா சிகிச்சையும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு தனியார் மருத்துவனைகளுக்கான கட்டணங்களும் வெளியிடப்பட்டன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் வரும் 2022 ஜனவரி 11ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை 2027 ஜனவரி மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காப்பீட்டிற்காக இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ.1,248.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிக்காக மக்கள் நல்வாழ்வு, வருவாய் மற்றும் நிதித்துறையை சேர்ந்த உயர் அலுவலர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: