அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும்: அரசு அறிவிப்பு

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு 2022 தைப்பொங்கல் அன்று 20  பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட அரசாணை:  2022ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில் வழங்க ரூ.10, 88,17,70,300 ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டன.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருடன் கலந்து ஆலோசித்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 20 பொருட்களில் முந்திரி-50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து அரசு நியாயவிலைக்கடைகள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கிடவும், மேலும், 17.11.2021 வரை நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கொள்முதல் செய்து விநியோகம் செய்திட கரும்புக்கு உண்டான தொகை தோராயமாக கரும்பு ஒன்றுக்கு ரூ.33 வீதம் மொத்தம் ரூ.71,10,85,980 என கணக்கீடு செய்து அத்தொகையினை வழங்குமாறும் அரசைக் கோரியுள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனரின் கருத்துவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடுதலாக (முழு) கரும்பும் சேர்த்து என வழங்க கரும்பு ஒன்றுக்கு, ரூ.33 வீதம் மொத்தம் ரூ.71,10,85,980 செலவில் வழங்கலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பான 20 பொருட்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யவும், இதற்கான நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

Related Stories: