தாம்பரம் ரயில்வே பணிமனையில் அந்தியோதயா விரைவு ரயில் தடம்புரண்டது: ஊழியர் படுகாயம்

தாம்பரம்: தாம்பரம் ரயில்வே பணிமனையில் அந்தியோதயா விரைவு ரயில் தடம்புரண்டதில் ஊழியர் படுகாயமடைந்தார். தாம்பரம் பகுதியில் 3வது ரயில் முனையம் உள்ளது. இங்குள்ள பணிமனையில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பல்வேறு விரைவு ரயில்கள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு  அந்தியோதயா விரைவு ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், நேற்று மதியம் பராமரிப்பு பணிக்காக  பிட் லைன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, இன்ஜின் பிரேக் பிடிக்காமல் போனதால், ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று வேகமாக மோதி தடம் புரண்டது.

இதில்,  பாயிண்ட் மேன் பிரபு என்பவருக்கு எலும்பு முறிந்து படுகாயம் ஏற்பட்டது.  தகவலறிந்த ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, எலும்பு முறிவால் அவதிப்பட்ட ஊழியரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், ஊழியர்கள் அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கிகள் மூலம் தடம்புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர். இதனால்  பராமரிப்பு பணிகள்  பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.

Related Stories:

More