பட்டாசு, பேனர் வேண்டாம் மழையால் பாதித்த மக்களுக்கு உதவுங்கள்: பிறந்தநாளையொட்டி திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் எனது பிறந்தநாள் இருக்க வேண்டும் என்று திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும், மக்களை சந்தித்துக் குறைகளைக் கேட்பதிலும், அதிகாரிகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை கூறுவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் வழியில் செயல்பட்டு வருவதைக் கண்டு நாடே பாராட்டுகிறது. முதல்வரின் வழியில் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், இளைஞர் அணி தம்பிமார்களும் களப்பணியாற்றி வருவதை அறிவேன்.

2015ம் ஆண்டைவிட அதிக மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததற்கு உங்களின் இந்தக் களப்பணியும் ஒரு முக்கியமான காரணம். அந்த வகையில், நான் எனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி வருகிறேன். இந்தச்சூழலில் எனது பிறந்த நாளையொட்டி என்னை வாழ்த்தவும், பிறந்தநாளை மையமாக வைத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் நீங்கள் தயாராகி வருவதை அறிவேன்.

கொரோனா பெருந்தொற்று, கனமழை என தொடர் பாதிப்புகளில் இருந்து திமுக அரசின் உதவியுடன் மக்கள் மீண்டு வரும் சூழலில் என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது. எனவே, பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, ப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்குப் பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படி மக்களுக்குப் பயனுள்ள வகையில் எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமையுமானால், அதைவிட மகிழ்ச்சி தருவது எனக்கு வேறொன்றும் இருக்க முடியாது. வடகிழக்குப் பருவமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதிலும் மீட்பு நடவடிக்கைகளிலும் வெள்ள பாதிப்புகளை சரிசெய்வதிலும் திமுகவினர், தொடர்ந்து களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்த நாளில் என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: