முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு: வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்  கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான  வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு ரூ.1 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அரசாணை: 2013-14ம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டினைச் சேர்ந்த மொத்தம் 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கலின் எண்ணிக்கையினை 2017-18ம் கல்வியாண்டு முதல் 700லிருந்து 1200ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2020-21ம் கல்வியாண்டிற்கான முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 1200 பயனாளிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க 2021-22ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.6 கோடி ஆதிதிராவிடர் நல ஆணையரின் பதவி பெயரிலான தன்பெயர் வைப்புக் கணக்கில் வரவு வைத்து செலவிட அனுமதியளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டுநிதிநிலை அறிக்கையில், ‘முனைவர் பட்டப்படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டமும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 16 கோடியாக உயர்த்தப்படும்’ என அறிவித்தார். 2021-22ம் நிதியாண்டிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தி, ஆண்டிற்கு 1600 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையினை ஒரு மாணவருக்கு ரூ.1 லட்சம் ஆக உயர்த்தியும், ரூ.15.59 கோடியினை கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தும், அடுத்துவரும் நிதியாண்டு (2022-23) முதல் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து அரசைக் கேட்டுகொண்டார்.

ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்து அதனை ஏற்று 2021-22ம் கல்வி ஆண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு ரூ.1 லட்சம் வீதம் 1600 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: