சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட திரு.வி.க. நகர் மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவு

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட திருவிக நகர் மண்டலத்தில்  பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் தாயகம் கவி, பரந்தாமன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி முதல் தொடர்ந்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்.

மேலும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, புளியந்தோப்பு பகுதியில், மழையால் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும், திரு.வி.க. நகர், 73வது வார்டு, ஸ்டீபன்சன் சாலையில் பாலப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் துரிதமாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

இதை தொடர்ந்து, சிவ இளங்கோ சாலை மற்றும் பெரவள்ளூர் காவல் நிலையம் எதிரில் உள்ள பகுதிகளிலும் பணிகளை பார்வையிட்டார். பின்னர், கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள குளத்தை சீரமைக்கும் பணியினையும் கந்தசாமி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதையும் பார்வையிட்டு மழைநீரை துரிதமாக வெளியேற்றவும்  உத்தரவிட்டார்.

Related Stories: