திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55 அடியை தாண்டியது; பாலாற்றங்கரையோர மக்களுக்கு 3-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை.!

உடுமலை: திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பாலாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இதுதவிர, திருமூர்த்திமலையில் பெய்யும் மழையினால் பஞ்சலிங்க அருவி வழியாகவும் அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த  அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே, நீர்மட்டம் 55 அடியை தாண்டியதால், பாலாற்றில் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் 2 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அதன்பிறகு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 55.73 அடியாக உயர்ந்தது. காலையில் 1387 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

பிரதான கால்வாய் வழியாக பாசனத்துக்கு 910 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, 3-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமூர்த்தி அணை வேகமாக நிரம்பி வருவதால், எந்த நேரத்திலும் உபரிநீர் திறந்து விடப்படலாம். எனவே, பாலாற்றின் கரையார பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

டாம்டாம் போட்டு எச்சரிக்கை

திருமூர்த்தி அணையில் இருந்து பாலாற்றில் திறக்கப்படும் உபரிநீர் ஜே.என்.பாளையம், தேவனூர்புதூர், அர்த்தநாரிபாளையம், நா.மு.சுங்கம் வழியாக ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் ஆழியாற்றில் கலக்கும். எனவே, அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், டாம் டாம் போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: