மேலூர் அரசு கலை கல்லூரியில் அடிப்படை வசதியின்றி அல்லல்படும் மாணவர்கள்

* குடிநீர், கழிப்பறை வசதியில்லை  

* செடி,கொடியை அகற்ற வேண்டும்

மேலூர் : மேலூர் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை, பெஞ்ச் வசதிகள் போதுமான அளவில் இல்லை என மாணவர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி என சுற்று வட்டார பகுதி மாணவர்களுக்கு மேலூர் அரசு கலை கல்லூரி ஒரு வரபிரசாதமாக உள்ளது. இரு பாலர் கல்லூரியான இதில் அதிகளவு மாணவர்கள் சேர துவங்கியதால், கடந்த 2007 வருடம் இக்கல்லூரியில் காலை, மாலை என 2 ஷிப்ட்களில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. 2 ஷிப்ட்களில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் ஒரே நேரத்தில் கல்லூரியில் கல்வி கற்க வர துவங்கினர். இதனால் அவர்கள் கல்லூரி வரும் பஸ்சில் இருந்து பிரச்னை துவங்கியது. அடித்து பிடித்து அனைவரும் ஒரே நேரத்தில் அரசு பஸ்களில் ஏறுவதால் இடநெருக்கடி, படியில் தொங்கி வருவது என உள்ளது.

64 ஏக்கர் பரப்பளவு உள்ள கல்லூரிக்கு காம்பவுண்ட் சுவர் இல்லை என்பது முதல் பிரச்னை. இதனால் வெளிநபர்களின் நடமாட்டம் உள்ளே உள்ளது. 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ள இக்கல்லூரியில் ஒரே ஒரு 7 கழிப்பறை உள்ள சுகாதார வளாகம் மட்டுமே உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட 16 கழிப்பறைகள் கொண்ட மற்றொரு கழிப்பறையை சுற்றி முட்செடிகள் முளைத்து, மூடி வைத்து விட்டார்கள். இதனால் முட்செடிகள், புதர்களுக்கு நடுவே இருக்கும் ஒரே ஒரு கழிப்பறையை மட்டுமே மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மாணவர்களுக்கு என ஒரு கழிப்பறை வசதி கூட இல்லை என்பது மிக கொடுமை. இதில் மாற்று திறனாளி மாணவர்களின் நிலை மிக மிக மோசமாக உள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மாணவ,மாணவிகள் வரும் போதே தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. 2 ஷிப்ட் மாணவர்களும் ஒரே நேரத்தில் கல்லூரி வருவதால், அவர்களுக்கு போதுமான வகுப்பறைகளும், டேபிள், பென்ஞ் வசதியும் போதுமானதாக இல்லை.

மூன்றாம் ஆண்டு மாணவர் ஆதித்யா கூறியதாவது: மாணவர்களுக்கு என கல்லூரி வளாகத்தில் கழிப்பறை வசதி கிடையாது. இதனால் வளாகம் முழுவதும் அசுத்தமாக காணப்படுகிறது. சுத்தகரிக்கப்பட்ட 2 குடிநீர் பிளாண்ட்களும் செயல்படாமல் உள்ளது. மாணவர் சூரியா கூறியதாவது: கல்லூரி முழுவதும் செடி கொடிகள் மண்டி உள்ளதால், எந்த இடத்தில் இருந்து பாம்பு, பூச்சி வரும் என்ற பயத்துடன் இருக்க வேண்டி உள்ளது என்றார்.

கல்லூரி முதல்வர் மணிமேகலா தேவியிடம் கேட்டபோது: கல்லூரியில் இரண்டாவது கழிப்பறை திறந்து விடப்பட்டுள்ளது. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் செயல்பட வில்லை என தற்போது தான் தெரிய வந்துள்ளது, அது விரைவில் சரி செய்யப்படும். போதுமான வகுப்பறைகள் உள்ளதால், 2 ஷிப்ட் நடத்துவதில் பிரச்னை இல்லை என கூறினார்.மொத்ததில் மாணவர்களின் குற்றச்சாட்டும், முதல்வரின் பதிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளது. விரைவில் மாணவ,மாணவியரின் நலன் கருதி, கல்லூரி நிர்வாகம் குறைகளை களைய வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: