கனமழையால் பாறைகள், மரங்கள் சரிந்தன போடிமெட்டு மலைச்சாலை மூடல்: தமிழக - கேரளா போக்குவரத்து பாதிப்பு

போடி: போடிமெட்டு சாலையில் மண்சரிவு காரணமாக பல இடங்களில் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கியச் சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. போடி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி, இரட்டை வாய்க்கால் பெரியாறு ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் போடிமெட்டு மலைச்சாலையிலும், போடிமெட்டு - பூப்பாறை இடையேயும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு, மரங்கள் ரோட்டில் சாய்ந்துள்ளது. முந்தல் மலையடிவாரத்திலிருந்து போடிமெட்டு வரை சுமார் 58 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 9வது முதல் 17வது கொண்டை ஊசி வளைவு வரை சுமார் 30 இடங்களில் பழமையான மரங்களும், பாறைகளும் சரிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள், தோட்டத் தொழிலாளர்களின் ஜீப்புகள் போடி முந்தல் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன.

இதேபோல கேரளாவில் இருந்து வந்த வாகனங்களும் போடிமெட்டு சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சரிவு, பாறை சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் பல்வேறு இடங்களில் இன்னும் பாறைகள் அகற்றும் பணி நிறைவடையாததாலும் மறு உத்தரவு வரும் வரை இந்த சாலையில் வாகனங்கள்  இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சுவர் இடிந்து சிறுவன் பலி: பெற்றோர் கண்முன் பரிதாபம்

கரூர் மாவட்டம், புலியூர் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (39). கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களது மகன்கள் ஆகாஷ்(14). சுனில்(12). ஆகாஷ் 10ம் வகுப்பும், சுனில் 6ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்றுமுன்தினம் வீட்டின் சுவர் இடிந்தது. 2 குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து அப்பகுதி மக்களும், கரூர் தீயணைப்பு துறையினரும் வந்து இடிபாடுகளில் சிக்கி பலியான சுனில் உடலை மீட்டனர். படுகாயத்துடன் கிடந்த ஆகாஷை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: