கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சுற்றுப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை: எம்பி செல்வம் வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய பணி நியமனத்தில் சுற்றுபுற மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அணுவாற்றல் துறை இயக்குனருக்கு காஞ்சிபுரம் எம்பி செல்வம் கடிதம் எழுதியுள்ளார். கல்பாக்கம் சுற்றுபுற இளைஞர்களுக்கு கல்பாக்கம் அணுவாற்றல் துறை பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவும், கல்பாக்கம் நகரியத்தில் பல மாதங்களாக பொதுமக்களுக்கு இடையூறாக மூடப்பட்டுள்ள கேட்களை திறக்கவேண்டும். மேலும், கல்பாக்கம் சுற்றுப்புற மக்களை வஞ்சிக்கும் வகையிலான ‘நிலா கமிட்டி’ நடைமுறையை ரத்து செய்யவேண்டும்.

கல்பாக்கம் அணுவாற்றல் துறை பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் சுற்றுப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். சிஎஸ்ஆர் நிதியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வத்திடம், புதுப்பட்டினம் திமுக கிளை செயலாளர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்தார். அதன்பேரில், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எம்.பி.செல்வம் கல்பாக்கம் அணுவாற்றல் துறை இயக்குனர் வெங்கட்ராமனுக்கு கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து அணுவாற்றல் துறை இயக்குனரை, அவரது அலுவலகத்தில் திமுக செயலாளர் தாமோதரன் ஆகியோர் நேரில் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது, எம்பியின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நிறைவேற்றி தருவதாக இயக்குனர் உறுதியளித்தார். அதேப்போல், புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால், இதே கோரிக்கையை முன்னிறுத்தி அணுவாற்றல் இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.

Related Stories: