அண்ணா நூற்றாண்டு நூலகம் ரூ.29 கோடியில் மறுசீரமைப்பு: டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது பொதுப்பணித்துறை

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மறுசீரமைப்பு பணிக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.179 கோடியில் கட்டப்பட்டு கடந்த 2010ல் திறக்கப்பட்டது. இந்த நூலகம்  மொத்தம் 8 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. இதில், 1,100 பேர் அமரும் வகையில் பெரிய ஆடிட்டோரியமும், 50 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கமும், 30 பேர் மற்றும் 151 பேர் அமரும் வகையில், இரு தனி கூட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி தளங்களில் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  சாதாரண நாட்களில் நூலகத்திற்கு 1000 பேர் வருகின்றனர். அதே நேரத்தில் விடுமுறை நாட்களில் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை வருகின்றனர். இவ்வளவு பெரிய நூலகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தியது. மேலும், இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டன. ஆனாலும், கடந்த ஆட்சியில் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், நூலக கட்டிடங்கள் பல இடங்களில் பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்ய அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நூற்றாண்டு நூலகத்தை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.34 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு பொதுப்பணித்துறை அனுப்பி வைத்திருந்தது.

அதன்பேரில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புனரமைக்க ரூ.29 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புனரமைப்பு பணி மேற்கொள்ள டெண்டர் அறிவிப்பை கடந்த 2ம் தேதி வெளியிட்டது. அதில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கட்டுமான பணிகள் ரூ.15 கோடியும், மின் சீரமைப்பு பணிகள் மற்றும் புதிதாக மின்சார சாதன பொருட்கள் வாங்குதல் ரூ.14 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதை தொடர்ந்து நாளை டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு இதற்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச தரத்திலான நூற்றாண்டு நூலகம் சாதாரண மக்களும், எளிய மாணவர்களும் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான வசதிகளுடன் ஏற்படுத்தப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: