முறைகேடுகளில் ஈடுபட்டதாக வடசென்னை கூட்டுறவு மொத்த பண்டகசாலை தலைவர் சஸ்பெண்ட்: கூடுதல் பதிவாளர் அதிரடி உத்தரவு

சென்னை: ரூ.80 லட்சம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வடசென்னை கூட்டுறவு பண்டகசாலை தலைவரை சஸ்பெண்ட் செய்து கூடுதல் பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ராயபுரம் இப்ராகிம் சாலை பகுதியில் வடசென்னை கூட்டுறவு மொத்த பண்டகசாலை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த பண்டகசாலை கட்டுப்பாட்டில் பாரிமுனை, பிராட்வே, ராயபுரம், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி, கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 129 பண்டகசாலை கடைகள் உள்ளன.

இதேபோல் பிராட்வே, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் 2 மண்ணெண்ணெய் விநியோக நிலையம் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நிர்வாகக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த இளங்கோவன் 2019ல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் ரூ.80 லட்சம் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பண்டகசாலை பணியாளருக்கு ஓய்வு காலப்பலன்களை அரசு விதி, சங்க விதிகளுக்கு முரணாக வழங்கியது தெரியவந்தது.

மேலும் பண்டகசாலைக்கு உட்பட்ட நியாயவிலை கடைகளை செப்பனிட்டது, நியாய விலைக்கடைகளுக்கு உபகரணங்கள் வாங்கியது, துறை அனுமதி பெறாமல் செலவு செய்து நிதியிழப்பு ஏற்படுத்தியது, நிர்வாகக்குழுவில் தீர்மானமின்றி 2009க்கு முன் மற்றும் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய நிலுவை தொகை மற்றும் நிதி பயன் வழங்கியது, அம்மா மருந்தகம் கிளையில் மருந்து மாத்திரை குறைவுக்கு காரணமான பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதி மற்றும் பண்டகசாலையின் துணை விதிக்கு எதிராக முடிவு செய்து வழங்கியது. அளவுக்கு அதிகமாக எரிபொருள் செலவு செய்து பண்டகசாலைக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. கவனக் குறைவாக செயல்பட்டு சங்க அலுவல்களை தவறாக நிர்வகித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிப்படி வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாகக்குழு தலைவர் இளங்கோவனை தற்காலிக பணி நீக்கம் செய்து, சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மிருணாளினி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பண்டகசாலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இல்லாத நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிபடி வேறொரு நிர்வாகக்குழு உறுப்பினரை நியமிக்கும் வரை சங்க பொறுப்பு மற்றும் பதிவேடுகளை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநரிடம் ஒப்படைக்கும்படியும் கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் மீது விசாரணை அறிக்கையின்படி தற்காலிக பணிநீக்கம் செய்த அதிகாரிகள், கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கூட்டுறவு துறை சங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: