விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை: மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் சர்ச்சை கருத்தால் பரபரப்பு..!!

டெல்லி: விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் சர்ச்சையாக தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், மேகாலயா கவர்னர் கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற ஒன்றிய  அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில் ‘‘விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை அவர்களின் அடிப்படை கோரிக்கை. அரசு அதை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்த கமிட்டி அமைக்க வேண்டும். இதை அரசு செய்தால், விவசாயிகள் அவர்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறுவார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவசாயிகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, அவர்களுடைய பிரச்சினையை ஆராய, அவர்கள் வீட்டிற்குச் செல்ல கமிட்டி அமைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். தேவையில்லாமல் போராட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறேன். நான் இந்த விஷயத்தில் அவர்களோடு இருக்கிறேன்.

மேலும், 3 சட்டங்களை திரும்பப்பெறுவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிய முன்னெடுத்து செல்ல, பெரிய இதயம் என்பதை காட்டியதற்காகவும் நடவடிக்கை எடுத்த பிரதமரை பாராட்டுகிறேன். என்னை நியமனம் செய்தவர்களிடம் இருந்து இது தொடர்பாக ஏதாவது அறிகுறி வந்தால், இந்த நிமிடத்திலேயே தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: