ஊட்டி புதுமந்து பகுதியில் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் மண்சரிவு

ஊட்டி : ஊட்டி அருகே புதுமந்து பகுதியில் இருந்து ஆயுதப்படை மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு வரும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை சமயத்தில் மரம் விழுதல், நிலச்சரிவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்படுவது வழக்கம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது கடந்த மாதம் துவங்கியது. அவ்வப்போது ஓரிரு நாட்கள் இடைவெளியுடன் தொடர்ச்சியாக மழை பொழிவு இருந்து வருகிறது.

கடந்த வாரம் முதல் 2 நாட்கள் பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவுகள், மரம் விழுதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. நேற்று அதிகாலை ஊட்டி புதுமந்து காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து ராஜ்பவன், ஆயுதப்படை காவலர் வளாகம், தாவரவியல் பூங்காவிற்கு வரும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஊட்டி நகராட்சி மூலம் ஜேசிபி., வரவழைக்கப்பட்டு சாலையில் குவிந்து கிடந்த மண் சகதி அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது. அதன் பின் இச்சாலையில் போக்குவரத்து சீரடைந்தது. மேலும் இச்சாலையில் புதர் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவற்றையும் அகற்றிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழையின்றி வெயில் மற்றும் மேகமூட்டமான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று மதியம் முதல் மழை துவங்கியுள்ளது.

Related Stories: