ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சியில் கெட்டுப்போன அரிசி, பருப்பு விநியோகம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒடுகத்தூர் : ஒடுகத்தூரில் கெட்டுபோன அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நியாயவிலைக் கடை உள்ளது. சுமார் 25 ஆண்டு பழமையான இந்த கட்டிடத்தில் ஓட்டை உடைசல்  காணப்படுகிறது. தற்போது பெய்த மழையால் மழைநீர் முழுவதும் கட்டிடத்திற்குள் சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட நனைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரமுகர் பதவி வகிப்பதால் நியாய விலைக் கடை விற்பனையாளர் மக்களுக்கு கெட்டுபோன அரிசியையே விநியோகம் செய்வதாகவும் கேட்டால் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாகவும் கூறப்படுகிறது.இதனால், அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் கடையில் ஆய்வு நடத்தினர்.

பின்னர், சேதமடைந்த அத்தியாவசிய பொருட்களை தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாற்றி வைக்க உத்தரவிட்டனர்.

கட்சி அலுவலகமாக மாறிய கூட்டுறவு வங்கி

அகரம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பிரமுகர் பதவி வகித்து வருகின்றார். இவர், கூட்டுறவு அலுவலகத்தில் கட்சி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கட்சி அலுவலகம்போல் மாற்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: