பாம்பன் சாலை பாலத்தில் ‘ஸ்பிரிங் பிளேட்’ இணைப்புகள் சேதம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ராமேஸ்வரம் : பாம்பன் சாலைப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரிங் பிளேட் இணைப்புகள் சேதமடைந்துள்ளதால் பாலத்தில் வாகன விபத்துகள் எற்படும் அபாய நிலை உள்ளது.

பாம்பன் கடலில் அமைந்துள்ள இநதிராகாந்தி சாலைப்பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் செலவில் முழுமையாக மராமத்து செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. பாலத்தின் மையப்பகுதியில் தூண்களுக்கு இடையில் உள்ள கான்கிரீட் கருடர் இணைப்புகளில் வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படாமல் இருக்க இரும்பினால் ஆன ஸ்பிரிங் பிளேட்டுகள் அனைத்தும் புதிதாக பொருத்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை துறையினரால் தார்ச்சாலை போடப்பட்டது. தற்போது பாலத்தின் தார்ச்சாலை ஆங்காங்கே சேதமடைந்து தார்கலவை பெயர்ந்து சிமெண்ட் கான்கிரீட் வெளியில் தெரிகிறது.

மேலும் பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் அதிர்வை தடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரிங் பிளேட்டுகள் நட்டுகள் கழன்று வெளியில் நீட்டிக்கொண்டிக்கிறது. இரும்பு இணைப்பு பிளேட்டுகளும் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தின் மேல் வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டு பாலத்தின் தாங்கும் திறன் குறைந்து வலுவிழக்கும் நிலை உள்ளது.

மேலும், பிளேட்டுகளில் நட்டுகள் கழன்று இருப்பதாலும், சாலையில் தார்பெயர்ந்து ஆங்காங்கே குழியாக காணப்படுவதாலும் பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஆபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் பாலத்தின் அனைத்து பகுதிகளும் சீரமைக்கப்பட்டு, புதிதாக ஸ்பிரிங் பிளேட்டுகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பாலத்தின் தன்மை பழைய நிலைக்கு மாறியுள்ளதால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஸ்பிரிங் பிளேட்டுகளை சரிசெய்து சேதமடைந்த சாலையையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: