துபாயில் ஏஜென்டுகள் பிடியில் சிக்கி தவித்துவரும் மகள்: பெற்றோர் புகார்

திருச்சி கே.கே.நகர், திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, அவரது மனைவி ஆகியோர் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் மீனாவுக்கு கடந்த 2010ல் தியாகராஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகளிர் குழு நடத்தி வந்த மீனாவுக்கு கடன் அதிகமானதால், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்ட் முகமது கவுஸ் என்பவர் மூலம் துபாய் சென்றார். ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வீட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறினார். துபாய் சென்றவுடன் துபாய் ஏஜென்ட் மஞ்சுளா அலுவலகத்தில் தங்கினார். அங்கு அபு என்ற ஏஜென்ட் எனது மகளின் பாஸ்போர்ட்டை அபகரித்துக்கொண்டார்.

இது தொடர்பாக மஞ்சுளாவிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்றார். பின்னர் சென்னையில் உள்ள ஏஜென்ட் ராணியிடம் பேசும்படி கூறினார். அவரிடம் கேட்டபோது மகளை மீட்டுத்தருவதாக கூறினார். கொரானா காரணம் காட்டி 8 மாதமாக தட்டிக்கழித்தார். அக்டோபர் மாதம் ராணியிடம் பேசியபோது, விரைவில் வீட்டு வேலைக்கு செல்வார் என கூறினார். நவம்பர் மாதம் வீட்டு வேலை கிடைத்துவிட்டதாக கூறினர். ஆனால் எனது மகளிடம் பேச முடியவில்லை.

இதற்கிடையே எங்களை தொடர்புகொண்ட மீனா, தன்னை விற்பதற்கு முயற்சி செய்வதாகவும், தன்னை காப்பாற்றும்படி கூறினார். இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய எம்பசி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. ஏஜென்ட்கள் முகமதுகவுஸ், ராணி, அபு, மஞ்சுளா ஆகியோர் கூட்டு சதி செய்து எனது மகளை அடைத்து வைத்துள்ளனர். அவர்களிடமிருந்து மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: