2 ஆண்டுகளில் புதிய மசோதா ஆந்திராவில் 3 தலைநகர் மசோதா திரும்பபெறப்பட்டது: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் 3 தலைநகர் சட்ட மசோதா திரும்ப பெறப்படுவதாகவும், 2 ஆண்டுகளில் திருத்தத்துடன் புதிய மசோதா கொண்டுவரப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் நேற்று அறிவித்தார். ஆந்திராவில் 3 தலைநகர் அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மசோதா மற்றும் அமராவதி ரெகுலார்டி டெவலப்மெண்ட்  அத்தாரிட்டி (சிஆர்டிஏ) மசோதா ஆகிய 2 மசோதாக்களை வாபஸ் பெறுவதாக மாநில முதல்வர் ஜெகன்மோகன் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ‘கடந்த காலத்தில் ஐதராபாத்தை மட்டுமே கொண்டு தலைநகர் செயல்பட்டது. பின்னர், ஏற்பட்ட மாநில பிரிவினையை போல் மீண்டும் ஒரு நிலை வரக்கூடாது.

எனவே,  மாநிலம் முழுவதும் சம வளர்ச்சி பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 3 தலைநகர் அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டபேரவை தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும் அமைக்க சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியினர் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தும், பல்வேறு சிக்கல்களையும் அளித்து வந்தனர். எனவே, 3 தலைநகர் அமைப்பதற்கான சட்ட மசோதா, சிஆர்டிஏ சட்ட மசோதாவை இந்த சட்டபேரவை மூலம் திரும்ப பெறுகிறோம். மேலும், 3 தலைநகர் அமைக்க ஏற்பட்ட தடைகள், சட்ட சிக்கல்கள் களையப்பட்டு, இன்னும் 2 ஆண்டுகளில் திருதத்தங்களுடன் புதிய மசோதா கொண்டு வரப்படும்’. இவ்வாறு அவர் பேசினார்.

10 கோடி நிவாரணம் ஒதுக்கீடு

சித்தூர், கடப்பா, அனந்தபூர், நெல்லூர் மாவட்ட கலெக்டர்களிடம் விஜயவாடா முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வர் ஜெகன்மோகன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை  நடத்தினார். திருப்பதி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் முருகன் ஹரி நாராயணன் பங்கேற்றார். முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில், ‘பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக மாவட்ட கலெக்டர்கள் இருக்க வேண்டும்.  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தரமான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.  சித்தூர், கடப்பா, நெல்லூர் மாவட்டங்களுக்கு தலா 10 கோடியும், அனந்தபுரம் மாவட்டத்திற்கு 5 கோடியும் வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: