முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கண்காணிப்பு குழுவின் உத்தரவுப்படி பராமரிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு தொடரும்!: உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவு நீரை தேக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது. கண்காணிப்புக்குழு, மத்திய நீர்வள ஆணையம், இருமாநில அரசுகள் தேர்ந்தெடுத்த முடிவுகளே தொடரும் என தெரிவித்துள்ளது. அணையின் நீர்கசிவு தொடர்பாக தற்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு நீதிபதி கன்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கேரள தரப்பு வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பாக விசாரணை மேற்கோள்ள வேண்டும் என கூறினார். அதேசமயம் தாங்கள் அவசரமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க கோரவில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து முல்லைப் பெரியாறு தொடர்பான மூல வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிற மனுக்கள் அதோடு சேர்த்து விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர். புதிதாக தொடரப்பட்டுள்ள எந்த மனுக்களிலும் தங்கள் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் அது வழக்கை இழுத்தடிக்கும் என தாங்கள் கருதுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கண்காணிப்பு குழுவின் உத்தரவுப்படி பராமரிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories: