பைக்கில் சென்ற மர்ம நபர்கள் அத்துமீறல்; பதான்கோட் ராணுவ முகாம் மீது வெடிகுண்டு தாக்குதல்.! பஞ்சாப்பில் இன்று அதிகாலை பயங்கரம்

பதான்கோட்: பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் ராணுவ முகாமின் குறிப்பிட்ட வாயிலில் மர்ம நபர்கள் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  பஞ்சாப் மாநிலம் பதான்கோட் என்ற இடத்தில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமுக்கு அருகே விமானப்படை நிலையங்கள், ராணுவ  வெடிமருந்து கிடங்குகள், இரண்டு கவச படைப்பிரிவுகள் ஆகியன உள்ளன. கடந்த  2016ம் ஆண்டு ஜனவரியில் பதான்கோட் விமானப்படை நிலையம் மீது தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக்  கொல்லப்பட்டனர். சுமார் 8 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அதிகாலை முகாமின் திரிவேணி கேட் வழியாக பைக்கில் சென்ற மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பதான்கோட்டின் அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், கையெறி குண்டு தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து பதான்கோட் போலீஸ் எஸ்.எஸ்.பி சுரேந்திர லம்பா கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் திரிவேணி கேட் பகுதியில் கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், திரிவேணி கேட் முன்பாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆய்வு ெசய்து வருகிறோம். மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: