பாக். விமானத்தை சுட்டு வீழ்த்தி வீரதீர செயல்!: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

டெல்லி: இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு, நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்திருக்கிறார். பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பல்வேறு தரப்பினருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்துள்ளார். அபிநந்தன் விங் கமாண்டராக இருந்த போது புரிந்த வீரதீர செயலுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீநகரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 27ல் பாகிஸ்தான் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். தொடர்ந்து, பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அவர், இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீரதீர செயல் புரிந்ததற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த விருதே குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டிருக்கிறது. அபிநந்தனுக்கு விருது வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: