விபரீதம் புரியாமல் மீன் பிடிக்கும் மக்கள் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திட்டக்குடி:  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவு 29.72 அடி ஆகும். தற்போது நீர்த்தேக்கத்தில் 28 அடி உள்ளது. ஓடை மூலம் தண்ணீர் வரத்து நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருப்பதால் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கரையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று மதியம் 3 மணி அளவில் கடகால் ஓடையில் 100 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

உபரிநீர் வெளியேறும் ஓடை அருகே உள்ள புலிவலம், பெருமுளை, சிறுமுளை, நாவலூர், சாத்தநத்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.   மேலும் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறையின் சார்பில் விரால், கெண்டை, சிலேபி உள்ளிட்ட பல்வகையான மீன்கள் வளர்க்கப்பட்டு மீன் பிடிப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று திறக்கப்பட்ட உபரிநீரில் மீன்கள் வெளியேறும் என்பதால் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தங்களிடம் உள்ள மீன் வலை மற்றும் கொசு வலை, சேலை உள்ளிட்டவைகளை  பயன்படுத்தி முண்டியடித்துக் கொண்டு மீன்பிடித்து வருகின்றனர். அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும், அவற்றை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

Related Stories: