மதுரையில் ஜவுளி கடையில் திடீர் தீவிபத்து பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை: மதுரை யில் மின்கசிவால் ரெடிமேட் ஜவுளி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் எதிரேயுள்ள கீழமாசி வீதி பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் ரெடிமேட் ஜவுளி கடை உள்ளது. தரைத்தளத்தில் ஜவுளிக்கடையும், முதல் மாடியில் குடோனும், 2வது மாடியில் தொழிலாளர்களும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தரைத்தளத்தில் உள்ள இன்வர்ட்டரில் பிடித்த தீப்பொறி, அடுக்கி வைத்திருந்த துணிகள் மீது பட்டு, கரும்புகை மூட்டம் ஏற்பட்டு மாடி படிக்கட்டு வழியாக மேல் மாடி வரை சென்று பரவியது. இதனைக் கண்ட மேலே தங்கி இருந்த தொழிலாளர்களால் கீழே இறங்கி வர முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கீழே ஷட்டர் கதவுகள் இருந்ததால், ஏணி மூலம் முதல் மாடிச்சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று தரைத்தளத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஊழியர்களும் மீட்கப்பட்டனர். தீயை விரைந்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடையின் உரிமையாளர் குபன்சிங் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள ஜவுளி பொருட்கள் எரிந்து நாசமாகின. தீவிபத்து குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: