அதிமுக ஆட்சி காலத்தில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி முறைகேடு மாஜி அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குகின்றனர்.!

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், விசாரணையில், சிறைத் துறையின் அதிகாரிகள் பலருக்கும் இதில் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும், இதில் அதிமுக மாஜி அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஐகோர்ட் வக்கீலும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான புகழேந்தி, ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களின் பேரில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். மதுரை சிறையில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்பட்ட பேண்டேஜ் துணி, அலுவலக கவர்கள் உள்ளிட்ட பொருட்களை, அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியதாக போலியாக கணக்கு தயாரித்தும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்ததாகவும், விற்பனையை விட தயாரிப்பிற்கான செலவை அதிகமாகக் காட்டி இந்த மோசடி நடத்தி இருப்பதாகவும், கடந்த 2016 முதல் 2021 மார்ச் வரை நடந்த ஊழலில் சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது மதுரை மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் இருக்கும் ஊழல் அதிகாரிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய சிறையின் 1,600 கைதிகளில் தண்டனை கைதிகள் மட்டுமே 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த கைதிகளைக் கொண்டு பொருட்கள் தயாரித்து, சிறை வளாகத்தில் உள்ள ‘பிரிசன் பஜார்’ மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை சிறையில் அலுவலக கவர்கள், காடா துணிகள், நாப்கின், இனிப்பு, காரம், மழை கோட், கொரோனா காலத்தில் மாஸ்க் என பல ெபாருட்களையும் தயாரிக்கும் பணிகளில் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறை வளாகத்தில் நர்சரி, மூலிகை செடிகள், பூச்செடிகள், மரக்கன்றுகள் வளர்த்து விற்கப்படுகின்றன. சிறை பின்புற இடத்தில் கத்தரி, வெண்டை, கோஸ், தக்காளி மற்றும் பல்வேறு வகையான கீரை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். சிறையில் வீணாகும் தண்ணீரை சுத்திகரித்து வழங்க, மறுசுழற்சி கருவியும் செயல்படுகிறது. மேலும், கட்லா, சாதா கெண்டை, ஜிலேபி, விரால் உள்ளிட்ட மீன்களை கைதிகள் வளர்த்து உயிருடன் விற்பதும் நடக்கிறது, மேலும் துணிகள் சலவையகம், காளான் பண்ணை, மட்டன் ஸ்டால் போன்றவையும் நடத்தப்படுகின்றன. சிறைக்குள்ளும், வெளியிலும் கேன்டீனும் செயல்படுகிறது.

மதுரை சிறை வளாகத்தில் உள்ள மட்டன் ஸ்டாலுக்காக, சிவகங்கை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் திறந்தவெளியில் வளர்க்கப்படுகின்றன. அங்கிருந்து லாரிகள் மூலம் இவை மதுரை கொண்டு வரப்படுகின்றன. கைதிகளுக்கான சிறு வருவாயாகவும், தண்டனை முடிந்து, திருந்தி வெளிவரும்போது தொழில் வாய்ப்புகளுக்கு எனவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிறை அதிகாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறைத்துறையில் ‘மெகா’ ஊழல் நடத்தியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் மதுரையில் மட்டுமே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக கூற முடியாது. சென்னை, பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, வேலூர், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் இருக்கும் சிறைகளிலும் கைதிகளைக் கொண்டு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் பங்க் போன்றவையும் கைதிகளைக் கொண்டு செயல்படுகிறது. அரசு சிறப்பு தனிக்குழு அமைத்து, ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, விசாரணை மேற்கொள்வது அவசியம்’’ என்றார்.

மாஜி அமைச்சர்கள்

மதுரை மத்திய சிறையில் உயரதிகாரியின் கணவர் ஒருவர் டோர் கீப்பராக பணியாற்றிய போது, கைதிகள் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது, மூல பொருட்கள் வாங்குவது என பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதில் உயரதிகாரிகள் முதல் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலும் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு 20 சதவீதம் கூலியாக கொடுக்க வேண்டும். அதுவும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். எனவே, முறையாக மோசடிகளை விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: