வேலூர் அருகே விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தில் தடை மீறி சென்றபோது பைக்குடன் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவவீரர் -தேடுதல் பணி தீவிரம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்வதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்ததால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன. நீர்நிலைகளில் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் சிலர் நீர்நிலைகளில், மீன் பிடிப்பது, குளிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் சுமார் 10 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. இதனால், வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பாலாறு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போலீசாரால் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று மாலை 5 மணியளவில் 25வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விரிஞ்சிபுரம் தரைபாலத்தில் தடையை மீறி பைக்கில் கடக்க முயன்றார். அப்போது, பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நிலை தடுமாறி விழுந்த வாலிபர் பைக்குடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களும் வெள்ளத்தில் குதித்து வாலிபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வாலிபரை மீட்க முடியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் குறித்து விசாரித்தனர். இதில் பாலாற்றில் அடித்து செல்லப்பட்டவர் வடுகந்தாங்கலை சேர்ந்த ராணுவவீரர் மனோகர் என்பது தெரிந்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து மனோகரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரிஞ்சிபுரம் பாலாற்றில் தடைமீறி தரை பாலத்தை கடக்க முயன்ற ராணுவவீரர் பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: