வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு தமிழக உயர் கல்வித் துறை உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்

புதுடெல்லி: வன்னியருக்கு உள்ஒதுக்கீடு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  ஏற்கனவே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக உயர் கல்வித் துறை, தமிழக சட்டத்துறை செயலாளர், பிசி மற்றும் எம்பிசி ஆணையங்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தனித்தனியாக புதிய மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, விதிமுறைகளுக்கு முரணாக சென்னை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது. இதேபோல், நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையின் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் அடுத்த வாரம்  விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: