சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி நியமனம்.!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான அனைத்து பொறுப்புகளையும் உயர்நீதிமன்ற மூத்த நிதிபதி எம்.துரைசாமி மேற்கொள்வார் என்றும், பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என்றும் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணியிடம் காலியாகவுள்ளது. இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணியிடம் காலியாகவுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் நிர்வாகம் மற்றும் வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அறிவிப்பாணையை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டுள்ளது. நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பதவி ஏற்கும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கான அனைத்து பொறுப்புகளையும் நீதிபதி எம்.துரைசாமி மேற்கொள்வார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி இன்று பொறுப்பேற்க உள்ளார்.

Related Stories: