கோடியக்கரையில் சீசன் களைகட்டியது: லட்சக்கணக்கில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை பறவைகள் வந்து செல்லும் சீசன் காலமாகும். தற்போது பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளதாலும், பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருவதாலும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்லும். ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்து குவிந்துள்ளது.

அதேபோல் ரஷ்யாவிலிருந்து கூழைக்கிடா, இலங்கையிலிருந்து பூநாரை, இமயமலை சாரல் பகுதியில் இருந்து செங்கால் நாரை மற்றும் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவிலிருந்து உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், அண்டார்டிகாவில் இருந்து கடற்காகம் உள்ளிட்ட 247 வகையான வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் காணலாம். சுற்றுலா பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழிகாட்டி, பைனாகுலர் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று (18ம் தேதி) முதல் வனசூழல் மேம்பாட்டு குழுவின் சார்பில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு உயர்தர சைவ மற்றும் அசைவ உணவு வழங்க வன உணவகம் திறக்கப்படுகிறது.

Related Stories: