விவசாயிகளுக்கு ஆதரவாக மிகப்பெரிய போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் தகவல்

புதுச்சேரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 23வது மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரியின் அரசியல் நிலவரம், கட்சியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான டி.கே.ரங்கராஜன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளது. இலங்கை, நேபாளம், பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவு இல்லை.

கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக, பெரிய போராட்ட இயக்கத்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5, ரூ.10 என பெயரளவில் குறைத்துள்ளதால் மக்களுக்கு பயனில்லை. புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி பெயரளவில் தான் உள்ளது. பாஜவே அதனை இயக்குகிறது. அறிவித்த திட்டங்கள் எதையும் செய்ய முடியாமல் அவர் தவித்து வருகிறார். எதிர்பார்த்த எந்த நிதியும் வரவில்லை.

வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் திட்டமும் நிறைவேற்றவில்லை. புதுச்சேரியில் 47 சதவீதம் இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக உள்ளனர். அரசு, தனியார் துறையில் வேலை நிரந்தரமில்லை. ஆலைகள் திறக்கப்படவில்லை. புதுவை மிகவும் பரிதாபமான பிரதேசமாக நீடிக்கிறது. மத்திய அரசு உறுதியளித்தபடி மாநில அந்தஸ்தும் தரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், இந்த பிரச்னைகள் தொடர்பாக விவாதித்து, அனைத்து மக்களையும் இணைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: