தனியார் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடனும் ஒன்றிய நிதியமைச்சர் ஆலோசனை.!

புதுடெல்லி: தனியார் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று மாலை அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக  இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘நிதி சீர்திருத்தம், தனியார் நிறுவனங்களின் முதலீடு, சாதகமான வணிகச் சூழல், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முதலீட்டை ஈர்த்தல் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. காணொலி மூலம் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் கரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பொருளாதார திட்டங்களை ஊக்குவித்தல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’ என்றன.

முன்னதாக ஒன்றிய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கூறுகையில், ‘மாநில அளவிலான பொருளாதா பிரச்னைகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும். அரசுத்துறையானது அதன் மூலதனத்தை செலவழித்து தனியார் துறையின் முதலீடுகளை பெறுகிறது. ஆனால், இது உண்மையான முதலீடாக மாறவில்லை. கடந்த 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதம் சரிந்தது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 20.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 64 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகள் நேரடியாக  வந்துள்ளது’ என்றார்.

Related Stories: