அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களுக்கான வாடகை தொகையை காசோலையாக பெற அனுமதி இல்லை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களுக்கான வாடகை, குத்தகை தொகையை காசோலையாக பெற அனுமதி இல்லை என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள், கட்டிடங்களின் வாடகைதாரர்களிடம் அந்தெந்த கோயில் நிர்வாகம் மூலம் வாடகை, குத்தகை பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்காக, கோயில் நிர்வாகம் சார்பில் பல வகை ரசீது வழங்கப்பட்டன.

இதனால் வாடகைதாரரின் ஒரிஜினல் வாடகைத் தொகை தெரிவதில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், வாடகை பாக்கி தொடர்பாக கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பினால் மட்டுமே பாக்கி எவ்வளவு என்பதே தெரிவதாகவும் வாடகைதாரர்கள்புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பேரில், வாடகைதாரர்கள் கணினி வழியாக வாடகை செலுத்தும் வசதி கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பெரிய கோயில்களில் கணினியில் வாடகை  வசூல் செய்யும் நிலை தான் உள்ளது.

ஆனால், அதே நேரத்தில் சிறிய அளவிலான வருவாய் கொண்ட மற்றும் கணினி வசதிகளை ஏற்படுத்த இயலாத கோயில்களில் வாடகைதாரர்கள் வாடகை செலுத்துவதற்காக பெரிய கோயில்களில் பொது வசூல் மையம் ஏற்படுத்த அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், பெரிய கோயில்களில் பொது வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் எந்தெந்த கோயில்களின் வாடகையை செலுத்தலாம் என்பது தொடர்பாகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களில் இருப்போர் பொது வசூல் மையத்தில் வாடகை செலுத்தி கொள்ளலாம்.

இந்த பொது வசூல் மையத்தில் வாடகைதாரர்களிடம் இருந்து காசோலையாக (cheque) பெற அனுமதி இல்லை. அதே நேரத்தில் டிடியாகவோ, ரொக்கமாகவோ பொது வசூல் மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு, வாடகைதாரர்கள் தரும் காசோலைகளில் (செக்) பணம் இல்லை என்று அடிக்கடி திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே, மீண்டும் அவர்களை அணுகி வாடகை கேட்க வேண்டியுள்ளது. அதற்கு பதிலாக ரொக்கமாகவோ, கோயில் பெயரில் டிடியாகவோக எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: