வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பு தமிழகத்தில் மழை நீடிக்கும்

சென்னை: வட உள்தமிழக பகுதிகளில் 3 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து மத்திய மேற்குவங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதுதவிர அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி மன்னார் வளைகுடா வழியாக நகர்ந்து மத்திய மேற்குவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியுடன் இணைகின்ற நிகழ்வால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று கன்னியாகுமரியில் 88 மிமீ மழை பெய்துள்ளது. வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் 3 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் 23 மிமீ முதல் 34 மிமீ வரை மழை பெய்துள்ளது.

இந்நிலையில், மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வட உள் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஈரோடு திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். இதையடுத்து இந்த மழை 16, 17ம் தேதிகளிலும் நீடிக்கும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அந்தமான் பகுதிகளிலும் இன்று மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ  வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: