திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோவா பொறுப்பாளராக எம்பி நியமனம்: மாஜி முதல்வருக்கு எம்பி பதவி

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக மஹுவா மொய்த்ராவை அக்கட்சி நியமனம் செய்துள்ளது. மேலும் கோவாவின் மாஜி முதல்வருக்கு எம்பி பதவி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த்துக்கு எதிராக, கடந்த சில தினங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றப்பத்திரிகை வெளியிட்டது. இந்த குற்றப்பத்திரிகையில் கோவாவில் அதிகரித்துள்ள வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, சட்டஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேற்குவங்கத்தில் ஆட்சியில் உள்ள மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், தற்போது கோவாவில் தனது தளத்தை விரிவுபடுத்தி வருகிறது. அதற்காக வரும் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) மக்களவை எம்பி மஹுவா மொய்த்ராவை, கோவா மாநில பொறுப்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி வெளியிட்டார். அதில், ‘மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் எம்பி மஹுவா மொய்த்ரா, கோவா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜியின் ஒப்புதல் அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மொய்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னால் முடிந்த பணிகளை ெசய்ய ஆவலாக உள்ளேன். வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்குவங்கத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில், கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ ஃபலீரோவை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: