செங்கல்பட்டு மாவட்டத்தில் வடியாத வெள்ளநீரில் மக்கள் தவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம், குருவன்மேடு இடையே தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இப்பகுதி மக்கள் பல கிமீ தூரம் சுற்றி வந்து அவதிப்படுகின்றனர். திம்மாவரம், மகாலட்சுமி நகரில் இஞ்சிமேடு அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீஞ்சல்மடுவின் கரை பகுதிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மகாலட்சுமி நகர், பாலாறு நகர், வைபவ் நகர் ஆகிய இடங்களில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து பாலூர் வழியாக செல்லும் சாலையில் வெங்கடாபுரம் அருகே சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலமையூர் ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், பல கிமீ சுற்றிக்கொண்டும், ஆபத்தான முறையில் பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்கின்றனர்.

கொளவாய் ஏரியை ஒட்டியுள்ள ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், வல்லம், நியூ காலனி பகுதிகளில் 2 ஆயிரம் வீடுகளை கடந்த 5 நாட்களாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் அனுமந்த புத்தேரி, அண்ணாநகர், ஜேசிகே நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: