சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுத்து நிரந்தர தீர்வு காண முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுத்து நிரந்தர தீர்வு காணும் வகையில்,  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 9 பேர் கொண்ட வல்லுநர்குழு  அமைக்கப்பட்டுள்ளது என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  கூறினார். சென்னை தாதன் குப்பம் குளம், வீனஸ் நகர் குடியிருப்பு உள்பட பல்வேறு பகுதிகளையும், பெரியார் நகர் அரசு புறநகர் உள்பட பல்வேறு பகுதிகளையும், மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் சூழந்துள்ள நீர் அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து அறிநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தினர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு  நிருபர்களிடம் கூறியதாவது: மழையாக இருந்தாலும், புயலாக இருந்தாலும்  மருத்துவமனை தான் மக்களின் உயிரை காப்பாற்றக் கூடிய இடம். அதனால் தண்ணீர்  தேங்காமல் இருக்க வகையில் இன்ஜினியர்கள் நியமித்து தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் 500 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனைகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் சிடி  ஸ்கேன் எடுப்பதற்கு 280 கேவி ஜெனரேட்டர் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை சிறப்பு  மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு கூறுகையில்:  மாநகராட்சியில் முதல்வர் உத்தரவின் பேரில் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தலைமை செயலாளர் சகோதரரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 9 பேர் கொண்ட வல்லுநர் குழு  அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது, அதை அகற்றும் வழி என்பது பற்றி நிபுணர் குழு அறிக்கை அளிக்கும். இந்த குழுவில் செயலாளர்  மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட பலர் நிபுணர்கள் குழுவில் இருப்பார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய பணிகள் முறையாக நடந்திருந்தால் ஏன் இவ்வளவு தண்ணீர் தேங்குகிறது.

கடந்த 2015ம் ஆண்டு  செம்பரம்பாக்கம் ஏரியில் 2 லட்சம் கனஅடி ஒரே நேரத்தில் திறந்ததால் பாதிப்பு  ஏற்பட்டது. கடந்த 11 நாட்களில் சென்னையில் 70 செ.மீ மழையும், 4 நாட்களில் மட்டுமே 66 செ.மீ மழை பெய்ததால் சேதம்  ஏற்பட்டது. மேலும் சென்னையில்  400 இடங்களில் தண்ணீர் தேங்கிய இடங்கள்  கண்டறியப்பட்டுள்ளது. 10 மாவட்ட ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் ரூ.9 கோடியே 96 லட்சம் செலவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 720 கிலோ மீட்டர் மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் இந்த அளவுக்கு தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Related Stories: