செய்யாறு பகுதிகளில் கனமழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின-3 வீடுகள் இடிந்து விழுந்தது

செய்யாறு :  செய்யாறு பகுதிகளில் கனமழை காரணமாக 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும், 3 வீடுகள் இடிந்து விழுந்தன.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. மழையளவு 52.20 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக வெம்பாக்கம் அடுத்த வடக்கல்பாக்கம் கிராமத்தில் ஜெயபால் என்பவரது ஓட்டு வீடும், புதுப்பாளையம் கிராமத்தில் பார்வதி, கண்ணன் ஆகியோரது ஓட்டு வீடுகளும் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த வெம்பாக்கம் தாசில்தார் சத்யன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.இதேபோல், கனமழை காரணமாக செய்யாறு அடுத்த கீழ்நெல்லி, தென்னம்பட்டு, வாழ்குடை, புளியரம்பாக்கம், சுருட்டல், செல்லபெரும்புலிமேடு, சித்தாத்தூர், அரசாணைபாலை, தண்டப்பந்தாங்கல் உட்பட பல்வேறு கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். அதிகாரிகள் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: