முல்லை பெரியாறில் அணை கட்டுவது குறித்து பேச கேரள அரசிடமிருந்து அழைப்பு வந்தால் தமிழக அரசு ஏற்கக்கூடாது: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து பேச கேரள அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழகம் ஏற்கக்கூடாது.  முல்லைப்பெரியாறு அணை வலிமையாக உள்ளது. அதன் நீர்மட்டத்தை 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கேரளாவில் பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு கேரள அரசுக்கு ஆணையிட்டுள்ளது. மரங்களை வெட்ட அளிக்கப்பட்ட அனுமதியை கேரளம் ரத்து செய்து விட்டாலும் கூட, விரைவில் அனுமதி அளித்து தான் ஆக வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்டால் அடுத்த சில மாதங்களில் பேபி அணையை வலுப்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். இதை தடுக்கவே கேரளம் துடிக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்தேக்க பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதை தடுக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. புதிய அணை குறித்து தமிழகத்தை பேச்சுக்கு அழைப்பதன் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதங்களுக்கு புத்துயிரூட்டவும் கேரளம் துடிக்கிறது. இதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்துவிடக் கூடாது. எனவே, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது உள்ளிட்ட எந்த சிக்கல் குறித்தும் கேரள முதல்வருடன், தமிழக முதல்வர் பேச்சு நடத்தக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: