வெள்ளத்தை ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிய விவகாரம் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்: சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் படகு பயணம் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி வரும் நிலையில், மக்கள் துயரத்தில் இருக்கும் போது வெள்ளத்தை ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிய அவரது நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை கடந்த 4 நாட்களாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார். இதற்காக, அவர் ஜீப் ஒன்றை பயன்படுத்துகிறார். பின்னர் அதில் இருந்து இறங்கி மழைநீரில் நடந்தே சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அவரது பாணியில் அமைச்சர்களும் பல பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். வெள்ளத்தில் தவித்து வரும் மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனுக்குடன் கிடைப்பதுடன் முதல்வர் நேரில் வருவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. இந்நிலையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகி கரு.நாகராஜன் ஆகியோர் முதல்வர் தொகுதியான கொளத்தூரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றனர். அப்போது படகு ஒன்றில் அவர்கள் ஏறி இருந்தபடி மக்களிடம் அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தனர். ஆனால், அரை அடி மட்டுமே மழைநீர் தேங்கிய எளிதாக நடந்து செல்லக்கூடிய பகுதியில் படகில் இருந்து கொண்டு மக்களை சந்திப்பது போன்று வீடியோ ஷூட் நடத்திய வீடியோ வைரல் ஆனது. இது சமூக வலைதளங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

அந்த வீடியோவில், வீடியோகிராபர் எந்த மாதிரி சொல்கிறாரோ, அந்த மாதிரி படகில் இருப்பவர்கள் மற்றும் படகை சுற்றியிருப்பவர்கள் நடந்து கொள்கின்றனர். கேமரா ஆங்கிள் எந்த இடத்தில் கட் செய்யப்பட வேண்டும் என்பதையும் வீடியோகிராபர் பேசுகிறார்.  இந்த நேரத்தில் இரண்டு சிறுவர்கள் படகில் இருந்து சற்று தூரத்தில் நடந்து செல்கிறார்கள். அவர்கள் முழங்கால்  அளவு கூட தண்ணீர் இல்லாமல் நடந்து செல்வதால், வீடியோகிராபர் அந்த இருவரையும் சற்று  தள்ளி நடந்து செல்லுங்கள் என்று கூறுகிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு தான் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல் பதிவுகள் வெளியாகியுள்ளது.

நிவாரண பணிகள் நடைபெறும் இடங்களுக்கு தலைவர்கள் செல்லும்போது வீடியோ கிராபர்கள், புகைப்பட கலைஞர்கள் செல்வார்கள். அதை பதிவு செய்வார்கள். ஆனால் கேமரா ஆங்கிள், பின்னணி நபர்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செட் போல செய்து எடுப்பது கிடையாது. எனவே தான் இது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் 2 பேர் எளிதாக தண்ணீரில் நடந்து செல்வது இந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பதால் அதிக அளவுக்கு தண்ணீர் இல்லை என்பதும், இங்கு அண்ணாமலை நடந்தே செல்லலாம், எதற்காக படகில் சென்றார் என்ற கேள்வியையும் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

பாஜ தலைவர் அண்ணாமலை படகு மூலம் பயணம் செய்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட வைரலான வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் வெள்ளப் பாதிப்பால் பரிதவிப்பில் இருப்பவர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு படகு பயணம் தேவைதானா என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அண்ணாமலையில் இதுபோன்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, காங்கிரசில் பரபரப்பாக பேசக்கூடிய ஜோதிமணி எம்பி தனது டிவிட்டர் பதிவில், ‘ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை? என்று அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோன்று திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் பலர் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை இருக்கும் இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ சூட் எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து ஜோதிமணி டிவிட் செய்துள்ளார். அதில், ‘‘மக்கள் மழை வெள்ளத்தோடு போராடிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?. அரசியல் அவலத்தின் உச்சகட்டம் இது.

பாஜவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக வருந்துகிறேன்’’ என்று அண்ணாமலைக்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை படகில் பயணிக்கும் வீடியோவையும் இதில் ஜோதிமணி இணைத்துள்ளார். இதேபோன்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் அதே வீடியோவை இணைத்து, இது தாண்டா சங்கி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் டிவிட்டர் பதிவில் அண்ணாமலையில் படகு பயணத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளது இணையதளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: