கோத்ரா வழக்கில் மோடி விடுதலைக்கு எதிர்ப்பு மதவாத வன்முறை என்பது வெடிக்கும் எரிமலை குழம்பு: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: ‘வகுப்புவாத வன்முறை என்பது எரிமலை வெடித்து சிதறும் தீக்குழம்பு போன்றது. அது தொடும் நிலத்தை எரித்து சாம்பலமாக்கி விடுகிறது,’ என்று மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்த போது 2002ம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 59 பயணிகள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக அதே ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத் குல்பெர்க் சங்கத்தில் நடந்த வன்முறையில் காங்கிரஸ் முன்னாள் எம்பி இஷான் ஜப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

கோத்ரா சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, ‘கோத்ரா வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட பிரதமர் மோடி உள்பட 64 பேருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை,’ என்று கூறியது. இதை ஏற்று, அவர்கள் மீதான வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜப்ரியின் மனைவி சைக்கியா ஜப்ரி மேல்முறையீடு செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சைக்கியா மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி கன்வீல்கர் தலைமையில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சைக்கியா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘வகுப்பு வாத வன்முறை என்பது வெடித்து சிதறும் எரிமலைக்குழம்பு போன்றது. இது பூமியில் படர்ந்து பீதியை ஏற்படுத்தும். எங்கு பட்டாலும் அழித்து விடும். எதிர்கால பழிவாங்கலுக்கு வளமான நிலமாக மாறிவிடும். திட்டமிடப்பட்ட மத வன்முறையால் பாகிஸ்தானில் எனது தாத்தா, பாட்டியை நான் இழந்திருக்கிறேன். எனவே, இது ஏற்றுக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ முடியாதது. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. இந்த செய்தியை உலகுக்கு அளிக்கிறேன். சட்டத்தின் ஆட்சி நிலவுவதை உறுதி செய்வது அல்லது மக்களை பீதியில் ஓட விடுவதுக்கு இடையேயான வரலாற்று விஷயம் இது,’’ என்றார்.

Related Stories: