2வது நாளாக பத்ம விருது விழா: சாலமன் பாப்பையா, எஸ்பிபி, சித்ரா உள்ளிட்டோர் கவுரவிப்பு

புதுடெல்லி: கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட  துறைகளில் சிறந்த சேவையாற்றிவர்களுக்கு ஆண்டு தோறும் ஒன்றிய அரசு உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020, 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும் 2வது நாளாக நடந்தது.  இவர்களுக்கு விருதுகள் வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார். 2021ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வான கலைஞர்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.இதில், ஒடிசாவை சேர்ந்த பிரபல சிற்பி சுதர்ஷன் சாகு, கர்நாடகாவை சேர்ந்த பிரபல டாக்டர் பெல்லே மோனப்ப ஹெக்டே, தொல்லியல் ஆராய்ச்சியாளர் பி.பி.,லால் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மறைந்த அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய், திரைப்பட பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா ஆகியோருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாப்பம்மாள், தடகள வீராங்கனை சுதா சிங், கோவையை சேர்ந்த மறைந்த கியர் மேன் பி.சுப்ரமணியன், தமிழக விளையாட்டு வீராங்கனை அனிதா, பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பெங்களூரை சேர்ந்த குள்ளமான மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் கே.ஒய்.வெங்கடேஷ் உள்பட பலருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.

ஜனாதிபதிக்கு திருஷ்டி கழித்த திருநங்கை

கர்நாடகாவை சேர்ந்த நாட்டுப்புற நடன கலைஞரான மத்தா பி மஞ்சம்மா ஜொகதிக்கு ஜனாதிபதி பத்மஸ்ரீ விருது வழங்கினார். திருநங்கையான இவர் விருதை வாங்கும் முன்பாக, ஜனாதிபதிக்கு தனது இடது கையால் திருஷ்டி கழித்து, தரையில் விரல்களை அழுத்தி சொடக்கு போட்டார்.  அதை ஜனாதிபதி புன்னகையுடன் ஏற்று கொண்டார்.

வெறும் காலுடன் வந்து விருது பெற்ற மூதாட்டி

நேற்று பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் சாமான்ய நிலையில் இருந்து வந்தவர்களும் அதிகளவில் இடம் பெற்றனர். அவர்களில் கர்நாடகாவை சேர்ந்த பழங்குடியின பெண்ணான துளசி கவுடாவும் ஒருவர். கடந்த 60 ஆண்டுகளாக தனியொரு ஆளாக இவர்,  30 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார். இவர் நேற்று விருது பெற வந்தபோது, செருப்பின்றி வெறும் காலுடன்தான் வந்தார். அவர் விருது பெற்றபோது பலத்த கரவொலி எழுந்தது. இவர் வெறும் காலுடன் வந்து விருது பெறுவதை பிரதமர் மோடி உள்ளிட்டோர் சமூக வலைதளங்ளில் பகிர்ந்துள்ளனர்.

Related Stories: